பெண்ணை அவளது சுயத்துடன் அவளாகவே வாழ விடவேண்டும்
கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் ரூபி வலன்ரீனா பிரான்ஸிஸ்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
பெண்ணை அவளது சுயத்துடன் அவளாகவே வாழ விடும் பொழுதுதான் ஒரு பெண்ணின் முழுமையான ஆக்பூர்வ சக்தி வெளிப்படும் என கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் ரூபி வலன்ரீனா பிரான்ஸிஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு குடிமகனும் தற்போது ஜேர்மன் நாட்டில் வசித்து வரும் எழுத்தாளருமான முகில்வாணனின் ஏழாவது மற்றும் எட்டாவது நூல்களான வண்ண எண்ணங்கள் மற்றும் ஆணுக்குப் பெண் அடிமையா? ஆகிய இரு நூல்களின் வெளியீடு ஞாயிறன்று 31.01.2016 மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத் தலைவரும் சட்டத்தரணியுமான எம். கணேசராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆணுக்குப் பெண் அடிமையா என்ற புத்தகத்திற்கு நூலாய்வு நிகழ்த்திய ரூபி வலன்ரீனா மேலும் உரையாற்றியபோது,
பெண்கள் எதிர்கொள்கின்ற சவால்கள், பெண்களது முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள காரணிகள், ஆணாதிக்க மனோபாவம் பெண்களைப் பாதிக்கின்ற முறைமை என்பவற்றைப் பற்றி நூலாசிரியரும் ஆய்வு அறிஞருமான முகில்வாணன் அவர்கள் தனது நூலில் சிலாகித்துப் பேசியிருக்கின்றார்.
இது ஒரு பரிசோதனை முயற்சி, இதனை அடிப்படையாகக் கொண்டு பெண்களுக்கு உன்னதமளிக்கக் கூடிய இன்னும் எத்தனையோ முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும்.
அப்பொழுது பெண்ணைப் பற்றி அவளே முடிவெடுக்க ஏதுவாக இருக்கும்.
தொடர்பாடலில் ஒரு விடயத்தை நாங்கள் மற்றவருக்குத் தெரிவிக்கின்றபோது நாம் என்ன சொல்ல வருகின்றோம் என்பதை விட நாம் அதை எவ்வாறு சொல்லப் போகின்றோம் என்பதே முக்கியமானது என்று கூறுவார்கள்.
சொல்லப்பட்ட முறைமையினால் சொன்ன விடயங்கள் காலாதி காலம் நினைவில் இருப்பதை நாம் அறிவோம்.
சிறுவயது முதற்கொண்டு பாடசாலை வாழ்க்கை முடித்து வெளியுலகில் கற்றுக் கொள்ளும் அனைத்து விடயங்களும் சொல்லப்பட்ட வழிமுறையிலேயே என்றென்றும் நினைவில் நிற்கும்.
அந்த அடிப்படையிலேதான் ஒரு பெண்ணும் தனது வாழ்நாளில் கற்றுக் கொடுக்கப்பட்ட விடயங்களை அனுசரித்து நடக்கப்பழகிக் கொள்கின்றாள்.
பெண்ணடிமைத் தனம் என்பதும் இதன் ஓர் அடியாகத்தான் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றது.
எனவே, இந்த உலகின் சிறப்பு மிக்க அபிவிருத்திக்கும் ஆற்றலுக்கும் காரணகர்த்தாக்களாக இருக்கின்ற பெண்களை மேலும் மாற்றுச் சிந்தனையூடே வளம்பெற வழிசமைக்க வேண்டும்.
அப்பொழுதுதான் இந்த உலகம் அமைதிப் பூங்காவாக மாறும்.
பெண்ணைப் பெண்ணின் சுயத்துடன் வாழவிடுதல் என்பது பெரிய சவால் நிறைந்த ஒன்றாகும். ஆனால் இதனைச் சாதிக்க ஆண் பெண் எல்லோரும் இணைந்து கைகோர்க்க வேண்டும்' என்றார்.
இந்நிகழ்வில் ஜேர்மன் நாட்டு எழுத்தாளர் முகில்வாணன், மகப்பேற்று பெண் நோயியல் நிபுணர் எம். திருக்குமார், மட்டக்களப்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தின் பொறுப்பு வைத்தியரும் சிரேஷ்ட உளநல மருத்துவருமான பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார், தென்கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அனுசூயா சேனாதிராஜா உட்பட தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.