கூட்டு எதிர்க் கட்சிக்குள் பிளவு




கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள பங்காளிக் கட்சிகளிடையேயும், மஹிந்த சார்பு குழுவுக்கிடையிலும் இணக்கப்பாடின்மை ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கடந்த கால நிகழ்வுகள் அனைத்தும் இதற்கு ஆதாரமாக காணப்படுவதாகவும் அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அண்மையில் முன்னெடுத்த கறுப்புக் கொடி நிகழ்வின் போதும், ஆர்ப்பாட்டங்கள், தேங்காய் உடைத்தல், தேசிய தின நிகழ்வுகளை புறக்கணித்தல் உட்பட கூட்டு எதிர்க்கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட பல நிகழ்வுகளிலும் கட்சிக்குள் முரண்பாடுகள் காணப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
உதய கம்மம்பில கறுப்புக் கொடி தினமொன்றை பிரகடனப்படுத்தும் போது, விமல் வீரவங்ச அதற்கு எதிராக செயற்பட்டுள்ளார். இவர் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
சுதந்திர தின அரச விழாவை புறக்கணிப்பதாக மஹிந்த சார்பு குழு அறிவித்திருந்த போதிலும், அக்குழுவிலுள்ள சில முக்கிய உறுப்பினர்கள் சுதந்திர தின நிகழ்வின் முன்வரிசையில் இடம்பிடித்திருந்ததை காணமுடிந்தது.
அதேபோன்று, நிதி மோசடி தொடர்பிலான பொலிஸ் விசாரணைப் பிரிவை நீக்குவதற்கு வேண்டி நேற்று மேற்கொள்ளப்பட்ட தேங்காய் உடைக்கும் நடவடிக்கையிலும் கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள குறிப்பிடத்தக்க உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை.
இதில், உதய கம்மம்பில, விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கலந்துகொள்ள வில்லை. அத்துடன், இந்த குழுவிலுள்ள டியு குணசேகர, திஸ்ஸ விதாரண போன்றவர்களும் ராஜபக்ஷ ஆதரவு குழுவிலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளமை அவர்களின் அறிவிப்புக்களிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.