சுனாமியில் காணாமல்போன குழந்தையை இரு குடும்பங்கள் உரிமை கோருகின்றன.
இலங்கையில் சுனாமியின்போது காணாமல் போன குழந்தை ஒன்றின் உரிமையை இப்போது இரு குடும்பங்கள் கோருகின்றன.
சுனாமி தாக்குதலில் இலங்கையில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்
நாட்டின் கிழக்கே கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிய வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமியை சுனாமியின்போது காணாமல் போன தங்களது குழந்தை என இரு குடும்பங்கள் சட்ட ரீதியாக உரிமை கோருகின்றன.
கல்முனையை சேர்ந்த தமிழ் குடும்பமொன்றும் அம்பாந்தோட்டையை சேர்ந்த முஸ்லிம் குடும்பமொன்றும் தனித்தனியாக உரிமை கோரும் மனுக்களை வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சிறுமியையும் உரிமை கோரும் இரு பெற்றோர்களையும் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி எதிர்வரும் 24ம் தேதி அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது அம்பாறையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு மையமொன்றில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சிறுமி அறநெறி பாடசாலைக்கு சென்றிருந்த வேளை சுனாமியின் பின்னர் காணாமல் போயிருந்ததாக தமிழ் குடும்பம் கூறுகின்றது.
ஆனால் சுனாமியின் போது மூன்று வயதான குழந்தையாக இருந்தபோது தந்தையின் கையிலிருந்து தவறிப் போன குழந்தை இந்த சிறுமி என முஸ்லிம் குடும்பம் கூறுகின்றது.