புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
நம்மைப் பாதிக்கும் மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்களை போதிய விழிப்புணர்வு இருந்தால் நம்மால் கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வளர்ந்து வரும் நாடுகளில் 47% புற்றுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 55% பேர் நோய்த்தாக்கத்திற்கு உள்ளான குறுகிய காலத்திலேயே உயிரிழக்கின்றனர்.
புற்றுநோய் குறித்த அலட்சியப்போக்கு தொடருமானால் 2030ஆம் ஆண்டளவில் வளர்ந்துவரும் நாடுகளில் புற்றுநோய்த்தாக்கம் 81% ஆக அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
புகையிலை பாவனை காரணமாகவே 22% புற்றுநோய்கள் மனிதரைத் தாக்குகின்றன. புகையிலை உபயோகிப்பதால் நுரையீரல் உணவுக்குழாய், குரல்வளை, வாய், தொண்டை, சிறுநீரகம், சிறுநீர்ப்பை, கணையம் மற்றும் வயிறு தொடர்பான இடங்கள், கருப்பை வாய் போன்ற உடற்பாகங்களில் புற்றுநோய்கள் ஏற்படுகின்றன.
இதனால் புகையிலை பாவனையை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்டளவான புற்றுநோய்களை முன்கூட்டியே அறிந்துகொண்டால், சத்திரசிகிச்சைகள், ரேடியோதெரப்பி அல்லது ஹீமோதெரப்பி மூலம் குணப்படுத்திவிட முடியும் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது.
இந்த ஆண்டிற்கான கருப்பொருளாக ”எம்மால் முடியும், என்னால் முடியும்” எனும் வாசகம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் போதுமானளவு இருக்குமாயின் 30% புற்றுநோய்களை குணப்படுத்திவிட முடியும்.
ஆரம்ப அறிகுறிகள் தென்படுமாயின், உடனடியாக மருத்துவரை நாடி பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள்.
தவிர, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையையும் துணிவையும் வழங்குங்கள், பரிதாபம் தேவையற்றது.