உவர் நீர் மீன் வளர்ப்புத் திட்டம் மட்டக்களப்பில்





இலங்கையில் முதன்முறையாக உவர் நீர் மீன் வளர்ப்புத் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைப்பு
(ஹுஸைன் )

இலங்கையில் முதன்முறையாக உவர் நீர் மீன்வளர்ப்பை ஆரம்பிப்பதற்காக  மீன்குஞ்சு உற்பத்தித் திட்டம் மட்டக்களப்பு, கிரான்குளம் தர்மபுரம் பகுதியில் மீன்பிடி கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் 142 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் திட்டத்தின் கீழ் இந்த உவர் நீர் மீன்குஞ்சுகள் உற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது.

கடற்கரையினை அண்டியதாக அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்திற்கு கடலில் இருந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டு மீன் குஞ்சு உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் இந்த உவர் மீன்கள் உற்பத்தி மூலம் எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து பெருமளவான மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யமுடியும் என இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் உபாலி மொஹோட்டி தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  மீள்குடியேற்ற பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.  ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண விவசாய மீன்பிடி அமைச்சர் கி. துரைராஜசிங்கம் மற்றும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி மொஹோட்டி உட்பட அமைச்சின் அதிகாரிகள், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.