அரச துறையில் பட்டதாரிகளுக்கான 17,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு தகுதியான வேலைவாய்ப்பை பெற்று கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவினூடாக முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக பொருளாதார நடவடிக்கை மற்றும் கிராமிய வளங்கள் இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்ப்பதற்காக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேராவின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அரச அலுவல்கள் மற்றும் நிர்வாக அமைச்சு, கல்வி, நிதி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் பிரதிநிதிகளும் அங்கம் வகித்துள்ளனர்.
இந்த குழுவினூடாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பலசுற்று பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
எனினும் தங்களின் பிரச்சினைக்கு இதுவரை எவ்விதமான உரிய தீர்வுகளும் முன்வைக்கப்படவில்லை என வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் தம்மிக்க ரணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.