சட்ட மா அதிபர் நியமனம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் போது சபையில் சூடான கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்ட மா அதிபர் பதவிக்கு தகுதியான பலருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், தகுதி குறைந்த ஒருவருக்கு அந்தப் பதவி வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன முன்வைத்த கருத்தின் போதே பாராளுமன்றம் சூடுபிடித்துள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு சிரேஷ்ட நீதிபதிகள் உள்ள நிலையில், மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டார். இது இவ்வாறிருக்கையில், இதுபோன்ற பிரச்சினைகளை எழுப்புபவர்கள் வெட்கப்பட வேண்டும் என தினேஷின் கருத்துக்கு சபைத் தலைவரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சபை சூடுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலையிட்டதனால் சபை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் இது தொடர்பில் கலந்துரையாடிய பின்னர் இறுதித் தீர்மானத்துக்கு வரவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.