பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் மற்றும் ஹோமாகமை நீதிமன்றத்தில் பிக்குகள் மேற்கொண்ட அடாவடிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான தம்பர அமில தேரர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காவியுடை தரித்துக் கொண்டு பௌத்தள பிக்குகளாக தங்களை இனம் காட்டிக் கொண்டு ஒருசிலர் மேற்கொள்ளும் செயற்பாடுகள் 2500 வருடங்களாக கட்டிக்காக்கப்படும் தேரவாத பௌத்த சிந்தனைகளுக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்துகின்றது.
இவ்வாறான பிக்குகளின் காவியுடை களையப்பட்டு அவர்களின் பிக்கு அந்தஸ்தும் நீக்கப்பட வேண்டும்.
காவியுடை அணிந்து கொண்டு நாட்டின் சட்டம், நீதித்துறைக்கு சவால் விடுவதும், அரசாங்கம் மற்றும் பிரதமரை சங்கடத்துக்குள்ளாக்கும் வகையில் செயற்படுவதும் போன்ற செயற்பாடுகளை ஒட்டுமொத்த சமூக அமைப்பும் வெறுத்து, புறம் தள்ள முன்வரவேண்டும் என்றும் தம்பர அமில தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.