பல உள்நாட்டுப் பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் சிறிய ஆப்ரிக்க நாடான ருவாண்டாவிலேயே உலகளவில் அதிகமான தாய்மார் குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றனர் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
பிரிட்டனிலேயே மிகக் குறைந்த தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதாக ஆய்வு கூறுகிறது
ருவாண்டாவில் அதிகபட்சமாக 85% பெண்கள் தமது குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுகின்றனர் என அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளை பிரிட்டனிலேயே மிகக் குறைந்த அளவில் தாய்பால் புகட்டும் பழக்கம் உள்ளதாவும் அந்த ஆய்வு கூறுகிறது.
பிரிட்டனிலுள்ள பெண்களில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே தமக்கு பிறந்த குழந்தைகளுக்கு முதல் ஆறுமாதம் வரை தாய்ப்பால் புகட்டுபவர்களாக இருக்கிறார்கள் என்பதும் இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தாய்ப்பால் கொடுக்கும் அளவை அதிகரிப்பதன் மூலம் உலகளவில் எட்டு லட்சத்திற்கும் அதிகமான பச்சிளம் குழந்தைகளின் மரணம் தடுக்கபடலாம் என லான்செட் மருத்துவ சஞ்சிகையில் வெளியாகியுள்ள கட்டுரையில் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைகள் நலத்தில் முன்னேற்றம் ஏற்படுவது மட்டுமன்றி, பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் குறையும் என மேலும் அவர்கள் கூறுகின்றனர்.